search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவையாறு அரண்மனை"

    சென்னை தொழில் அதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான திருவையாறு அரண்மனையில் போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நேற்று ஆய்வு நடத்தினார்.
    திருவையாறு:

    தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சிலை கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியை சேர்ந்த தொழில் அதிபர் ரன்வீர்ஷா, வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் பழங்காலத்தை சேர்ந்த வெண்கல சிலைகள், கலை நயமிக்க கல் தூண்கள் உள்பட 89 கலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.100 கோடி ஆகும்.

    தொழில் அதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனைகள் தஞ்சை மாவட்டம் திருவையாறிலும், திருவாரூரிலும் உள்ளன. இதில் திருவையாறில் உள்ள அரண்மனை காவிரி ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ளது. இது மராட்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். இதை 10 ஆண்டுகளுக்கு முன்பு ரன்வீர்ஷா விலைக்கு வாங்கினார். இங்கு ஆண்டுதோறும் 3 நாட்கள் “ப்ரக்ருதி பவுண்டேசன்” சார்பில் இசை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    சென்னையில் உள்ள ரன்வீர்ஷாவின் வீட்டில் பழங்காலத்தை சேர்ந்த கலை பொருட்கள் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து திருவையாறில் உள்ள அவருக்கு சொந்தமான அரண்மனையில் சோதனை நடத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் திட்டமிட்டிருந்தனர். அதன்படி நேற்று திருவையாறில் உள்ள ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனைக்கு நேற்று காலை 11 மணி அளவில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் வந்தனர்.

    அப்போது அரண்மனைக்குள் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். முன்னதாக அதிகாரிகள் அரண்மனையின் பெண் காவலாளியிடம், சிலைகளை அரண்மனைக்கு கொண்டு வந்தார்களா? இங்கிருந்து எதையாவது எடுத்து சென்றார்களா? என விசாரணை நடத்தினர். அதற்கு பதில் அளித்த காவலாளி, சிலைகள் எதுவும் கொண்டு வரப்படவில்லை என பதில் அளித்தார்.

    அரை மணிநேரம் ஆய்வு பணி நீடித்தது. அதன்பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர். ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் திருவையாறு அரண்மனைக்கு திடீரென வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    தொழில் அதிபரான ரன்வீர்ஷா பழங்கால அரண்மனைகளை வாங்கி பராமரிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இவருக்கு சொந்தமான அரண்மனைகள் திருவாரூர், ஊட்டி ஆகிய இடங்களிலும் உள்ளன.

    கோர்ட்டில் முறையான அனுமதி பெற்று திருவையாறு அரண்மனையில் மீண்டும் ஆய்வு நடத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    ×